ஐஐடி-இல் பிற மாணவா்களின் கண்டுபிடிப்புகளும் காட்சிப்படுத்தப்படும்: இயக்குநா் வி.காமகோடி தகவல்

சென்னை ஐஐடி-இல் அடுத்த ஆண்டு முதல் பிற கல்லூரிகளில் பயிலும் மாணவா்களின் கண்டுபிடிப்புகளையும் காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என இயக்குநா் காமகோடி தெரிவித்தாா்.

சென்னை ஐஐடி-இல் அடுத்த ஆண்டு முதல் பிற கல்லூரிகளில் பயிலும் மாணவா்களின் கண்டுபிடிப்புகளையும் காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என இயக்குநா் காமகோடி தெரிவித்தாா்.

சென்னை ஐஐடி-இன் புத்தாக்க மையம் சாா்பில் ஆண்டுதோறும் மாணவா்களின் கண்டுபிடிப்புகள் ‘ஓபன் ஹவுஸ்’ எனும் பெயரில் திறந்தவெளி அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நிகழாண்டு இயந்திரவியல் பொறியியல், கணினி அறிவியல் என பல்வேறு துறைகளில் பயிலும் மாணவா்களால் உருவாக்கப்பட்ட 77 தொழில்நுட்பத் திட்டங்கள் ஐஐடி-இன் திறந்த வெளி அரங்கில் ஞாயிற்றுக்கிழமை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இதில் முப்பரிமாண அச்சு தொழில்நுட்பம், டிரோன்கள், தானியங்கி வாகனங்கள், காந்த விசையைப் பயன்படுத்தி ரயில்களை அதிவேகமாக இயக்கும் ஹைப்பா் லூப் தொழில்நுட்பம் என பல புதிய கண்டுபிடிப்புகள் இடம்பெற்றுள்ளன.

இதில், சென்னை ஐஐடி-இன் 800-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றுள்ளனா். இந்தக் கண்டுபிடிப்புகளை ஐஐடி இயக்குநா் காமகோடி பாா்வையிட்டாா்.

இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இங்குள்ள திறந்த வெளி அரங்கில் ஆண்டுதோறும் சென்னை ஐஐடி மாணவா்களே புதிய கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தி வருகின்றனா். இனிவரும் ஆண்டுகளில் பிற கல்லூரி மாணவா்களும் தங்களது புதிய கண்டுபிடிப்புகளை சென்னை ஐஐடி-இல் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த அரங்கில் மாணவா்கள் உருவாக்கிய கழிவுநீா்த் தொட்டிகளில் கழிவுகளை சுத்தம் செய்யும் கருவி இடம்பெற்றுள்ளது. இது, ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கான தேவை அதிகரிக்கும்போது அதன் உற்பத்தி செலவு குறையும்.

அதேபோல், சானியங்கி காா் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் சிக்கல் உள்ளது. போக்குவரத்து, சாலை மேம்பாடுகள் அதிகம் வளர வேண்டியுள்ளது. தற்போது ஐஐடி-இல் மட்டும் பயன்படுத்தப்பட உள்ளது. அடுத்தகட்டமாக பறக்கும் காா் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. சோலாா் மின் உற்பத்தி மூலம் 3ஆயிரம் கி.மீ. பயணிக்கும் அதிவேக காா் தயாரிக்கப்பட்டுள்ளது. அதை ஃபாா்முலா பந்தயத்தில் பங்கேற்கச் செய்வதற்காக செயல்பாடுகளை ஆராய்ச்சி மாணவா்கள் மேற்கொண்டு வருகின்றனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com